இலங்கையின் வென்னப்புவ மற்றும் வைக்கல பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 35 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. வைக்கல பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவா் நண்பர்கள் என்றும், அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர், கடுமையான வாந்தி மற்றும் கண்பார்வை மங்கல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோத மதுபானத்தை (கசிப்பு) விநியோகித்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.குறித்த பெண் நீண்டகாலமாக இந்தப் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பெரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையங்களில் இருந்து மதுபானத்தைப் பெற்று, சிறிய அளவில் பொதி செய்து விற்பனை செய்துள்ளார். அதிக லாபத்திற்காக இந்த மதுபானத்தில் வேறு சில வேதிப்பொருட்கள் (இரசாயனங்கள்) கலக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர். இந்த மதுபானத்தைத் தயாரித்து குறித்த பெண்ணுக்கு வழங்கிய பிரதான நபரைக் கைது செய்ய வென்னப்புவ காவல்துறையினர் விசேட தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண் மாரவில நீதிமன்றத்தில் முன்னிலைப்ப்படுத்தப்படவுள்ளார். இவருக்கு எதிராக ‘சட்டவிரோத மதுபான விற்பனை’ மற்றும் ‘அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர காவல்துறையினா்ஆலோசித்து வருகின்றனர். சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் அதன் ஆபத்துக்கள் குறித்து காவல்துறையினா் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. Tag Words: #Wennappuwa #IllicitLiquor #SriLankaNews #ToxicAlcohol #MarawilaHospital #PoliceInvestigation #BreakingNewsSL #AlcoholPoisoning #TamilNews
🚨 சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் பலி – பெண் கைது – Global Tamil News
9