தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி (S. Dhanalakshmi), இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (NADA) ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தனலட்சுமியிடம் நடத்தப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனையில், தடகளத்தில் தடை செய்யப்பட்ட ‘டிரோஸ்டானோலான்’ (Drostanolone) என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இவர் ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டுகள் தடையை அனுபவித்தவர். தற்போது மீண்டும் 2-வது முறையாகச் சிக்கியதால், விதிகளின்படி அவருக்குக் கடுமையான 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு செப்டம்பர் 19, 2025 முதல் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் (11.36 விநாடிகள்) அவர் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் சாதனைகள் இந்தப் புகாரின் காரணமாகப் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது 27 வயதாகும் தனலட்சுமிக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் களமிறங்கும்போது 35 வயதாகிவிடும். இதனால் அவரது தடகளப் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவே விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர். 2021 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலகத் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த ஒரு வீராங்கனை இவ்வாறு சிக்கியது வருத்தமளிப்பதாக உள்ளது. தனலட்சுமிக்கு எதிராக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) 8 ஆண்டுகாலத் தடையை அறிவித்திருந்தாலும், சட்டப்படி அவருக்குச் சில வாய்ப்புகள் உள்ளன. NADA-வின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி (ADDP) வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அவர் ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு குழுவிடம் (Anti-Doping Appeal Panel – ADAP) மேல்முறையீடு செய்ய முடியும். தடை செய்யப்பட்ட மருந்து தனது உடலுக்குள் ‘தெரியாமல் அல்லது தற்செயலாகச் சென்றது’ (Unintentional ingestion) என்பதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே தடையின் கால அளவைக் குறைக்க வாய்ப்பு உண்டு. இரண்டாவது முறையாகப் பிடிபட்டிருப்பதாலும், வீரியமிக்க ‘டிரோஸ்டானோலான்’ ஸ்டெராய்டு கண்டறியப்பட்டிருப்பதாலும், இந்தத் தீர்ப்பை மாற்றுவது மிகவும் கடினம் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். Tag Words: #Dhanalakshmi #AthleticsBan #NADA #DopingScandal #TamilNaduSports #TrichyAthlete #100mSprint #IndianAthletics #BreakingNewsSports
🏃♀️ ஊக்கமருந்து – தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டுகள் தடை – Global Tamil News
7
previous post