இலங்கையின் ஊவா மாகாணம் மற்றும் பதுளை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளாா். பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பதுளை மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலம் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சியுள்ளதால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல் , மரங்கள், மின்கம்பங்கள் அல்லது வேலிகள் சாய்வடைதல், கட்டிடங்களின் சுவர்களில் புதிய வெடிப்புகள் தோன்றுதல், ஊற்றுகளில் இருந்து திடீரென சேற்று நீர் வெளியேறுதல் அல்லது நீரோட்டங்கள் தடைப்படுதல் போன்றன அவதானிக்க வேண்டிய அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அபாயகரமான பகுதிகளில் உள்ள மக்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம் எனவும் எச்சாிக்கப்பட்டுள்ளது உங்கள் பகுதியில் மழைமானிகள் இருந்தால், மழையின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக 24 மணிநேரத்தில் 100mm – 150mm மழைவீழ்ச்சி பதிவானால் மண்சரிவு எச்சரிக்கை தீவிரமடையும். ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அல்லது மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கிராம உத்தியோகத்தர் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவைத் தொடர்புகொள்ளவும். Tag Words: #BadullaWeather #UvaProvince #LandslideWarning #SriLankaRain #DisasterManagement #SafeSriLanka #BadullaNews #UvaMuzhuvan #TamilNewsSL
⛈️ மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை: – Global Tamil News
7