வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுக்கும் புட்டபர்த்தி சத்திய சாயி பாபா இடையிலான ஆன்மீகத் தொடர்பு! – Global Tamil News

by ilankai

வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னிலையாகியுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த ஒரு சுவாரசியமான இந்திய ஆன்மீகத் தொடர்பு தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாவதற்கு முன்னர், 2005 ஆம் ஆண்டு வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, தனது மனைவி சிலியா ப்ளோரஸுடன் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு வருகை சென்று சத்திய சாயி பாபாவை நேரில் சந்தித்தார். மதுரோவின் மனைவி சிலியா ப்ளோரஸ் நீண்டகாலமாக சாயி பக்தராக இருந்தவர். அவர் மூலமே மதுரோ ஆன்மீகப் பாதைக்கு ஈர்க்கப்பட்டார். புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பாபாவின் காலடியில் மதுரோ தம்பதியினர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மதுரோ தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் (Miraflores Palace) புரட்சியாளர்கள் சைமன் பொலிவர் மற்றும் ஹியூகோ சாவேஸ் ஆகியோரின் படங்களுக்கு இணையாக சத்திய சாயி பாபாவின் பெரிய உருவப்படத்தையும் வைத்திருந்தார். 2011-ல் சத்திய சாயி பாபா முக்தி அடைந்தபோது, வெனிசுலா நாடாளுமன்றத்தில் அவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மதுரோ முக்கியக் காரணமாக இருந்தார். மேலும், அந்த நாட்டில் ஒரு நாள் அரசு துக்கமும் அனுசரிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2025-ல், சாயி பாபாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மதுரோ அவரை “ஒளிமயமான ஆத்மா” (Being of Light) என்று புகழ்ந்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மதுரோ தம்பதியினர் இந்திய ஆன்மீகத்தின் மீது கொண்டிருந்த இந்த ஈடுபாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts