தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை  – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்  வாதிட்டார். “பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார். 🔍 பின்னணி: தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #JaffnaCourt #ThaiyittyVihara #VelanSwamigal #MASumandiran #NiroshThiyagaraja #LandRights #TamilStruggle #BreakingNewsTamil #SriLankaJustice

Related Posts