காணிகளை கோருபவர்களுக்கு எதிராக தனித்தனியே வழக்கு தொடரும் பலாலி பொலிஸார்

by ilankai

தமது காணிகளை கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக தனித்தனியாக பொலிஸார் நாலைந்து வழக்குகளை தொடர்ந்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸார் தனித்தனியாக வழக்குகளை தொடுக்கின்றனர். குறிப்பாக காணி உரிமையாளர்களில் ஒருவரான வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சாருஜனுக்கு எதிராக நாலைந்து வழக்குகளை பொலிஸார் தொடர்ந்துள்ளனர். அவற்றில் அவரை சந்தேக நபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். இரு தரப்புக்கு இடையில் சமாதான சீர்குலைப்பு நடைபெறுவதாக பொலிஸார் வழக்கு தொடர்ந்தால் இரு தரப்பையும் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு எதிராக மாத்திரம் தனித்தனியே வழக்குகளை தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. பொலிஸார் தான் ஒட்டு மொத்தமாக சட்டவிரோதமான முறையில் நடந்துகொண்டு இருக்கின்றனர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது சமர்ப்பணங்களில் முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார். 

Related Posts