அதிரடி கைது: 72,000 ரூபா இலஞ்சம் பெற்ற ASP மற்றும் பெண் காவற்துறை சார்ஜென்ட் சிக்கினர்! – Global Tamil News

by ilankai

இலங்கை காவற்துறை சேவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமொன்றில், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் (ASP) ஒருவரும், பெண் காவற்துறை சார்ஜென்ட் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி காவல் நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர், தனது வீட்டிலிருந்து கடமைக்குச் செல்வதற்காக மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான  காவற்துறை  அத்தியட்சகரின் அனுமதியைப் பெற) பரிந்துரை ஒன்றைக் கோரியுள்ளார். இந்த பரிந்துரையை வழங்குவதற்காக 72,000 ரூபா பணம் விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உதவிக் காவற்துறை அத்தியட்சகர் (ASP): நுவரெலியா உதவிப் காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் இவர், இன்று காலை 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். பெண் காவற்துறை சார்ஜென்ட்: கல்முனை உதவி காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் இவர், இன்று மாலை 3.00 மணியளவில் அலுவலகத்தினுள் வைத்தே அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நீண்டநேர விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரும் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். காவற்துறை திணைக்களத்திற்குள் இடம்பெற்ற இந்த முறைகேடு மற்றும் கைது சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts