🚨  14 வயது சிறுவன் அடித்துக் கொலை- தந்தை கைது – Global Tamil News

by ilankai

இரத்தினபுரி மாவட்டம், தெரணியகல நூரி (Noori) காவலஹதுறைப்பிரிவுக்குட்பட்ட நூரியவத்தை 2-ஆம் பிரிவில் தந்தையே தனது மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் நூரியவத்தை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைமாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 02, வெள்ளிக்கிழமை) இரவு, குறித்த சிறுவன் வீட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்படுவதாக அயலவா்கள் வழங்கிய அவசரத் தகவல்களை அடுத்து நூரி காவல் நிலைய காவல்துறையினா் உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்றபோது, சிறுவன் வீட்டின் அருகே மயக்க நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக நூரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சிறுவனின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் தாக்குதல் அறிகுறிகளைத் தொடர்ந்து, அவரது தந்தையை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது மேலதிக பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை (Avissawella) ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை எதற்காக சிறுவனைத் தாக்கினார்? மதுபோதையில் இருந்தாரா? அல்லது குடும்பத் தகராறு காரணமா? என்பது குறித்து நூரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த தந்தை அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Tag Words: #NooriNews #Deraniyagala #Avissawella #ChildAbuse #CrimeNews #SriLankaPolice #Tragedy #ChildSafety #TamilNews #BreakingNewsLK

Related Posts