தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். சிகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை காவல்துறையினர் இடைமறித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், தையிட்டி விகாரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பேருந்து மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தமது நில உரிமையை மீட்டெடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதியுடன் உள்ளனர். #Thaiyitty #Jaffna #Protest #LandRights #JaffnaUniversity #UoJ #Justice #TamilLand #LandGrab #NorthernSri Lanka #தையிட்டி #யாழ்ப்பாணம் #போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்! – Global Tamil News
9