தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம் , மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்
1