இலங்கைத் தமிழருக்கு  லண்டனில் 67,000 £கள் அபராதம் – Global Tamil News

by ilankai

பிரித்தானியாவில் தமிழ் இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 67,000 பவுண்டுகள் (சுமார் 2.5 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் மற்றும் நஷ்டஈடு விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய இளம் தமிழ் இளைஞர் ஒருவரை, அந்த நிலையத்தின் உரிமையாளரான இலங்கைத் தமிழர் மிக மோசமாக நடத்தியுள்ளார்.  அந்த இளைஞருக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்கப்படாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை வாங்கப்பட்டுள்ளது. மேலும் வேலைத்தலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த இளைஞரை உரிமையாளர் துன்புறுத்தியமை ,  போதிய விடுமுறை மற்றும் ஓய்வு வழங்கப்படாமல் அடிமைத் தனமான முறையில் வேலை வாங்கியமை போன்றன நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம், மன உளைச்சலுக்கான நஷ்டஈடு மற்றும் அபராதமாக மொத்தம் 67,000 பவுண்டுகளை வழங்குமாறு உத்தரவிட்டது. பிரித்தானியா போன்ற நாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் தங்களுக்குள் நடத்தும் இத்தகைய சுரண்டல்களுக்கு எதிராக அந்நாட்டுச் சட்டம் மிகக் கடுமையானது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தஞ்சம் கோரியவர்கள் அல்லது குறுகிய கால விசாவில் இருப்பவர்களைப் பயமுறுத்தி வேலை வாங்குவது பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் தமிழர்கள் தயக்கமின்றி தொழிற்சங்கங்கள் அல்லது சட்டத்தரணிகளின் உதவியை நாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். Tag Words: #UKTamilNews #LabourExploitation #LondonCourt #JusticeForTamils #SriLankanTamilUK #WorkplaceRights #MinimumWageViolation #BreakingNewsUK #TamilDiaspora

Related Posts