🎬 ‘பராசக்தி’ பட விவகாரம்: நீதிமன்றம் சொன்னது என்ன? – Global Tamil News

by ilankai

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ (2026) திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10, 2026 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் கதை, தனது ‘செம்மொழி’ கதையின் நகல் என்று கூறி உதவி இயக்குநர் கே.வி. ராஜேந்திரன் (வருண் ராஜேந்திரன்) வழக்குத் தொடர்ந்தார். 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து தான் எழுதிய கதையைத் திருடி ‘பராசக்தி’ எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பட வெளியீட்டுக்குத் தடை கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பட வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டதுடன் கதையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆராய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு (SWAN) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையை இன்று (ஜனவரி 2, 2026) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 1952-இல் வெளியான சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற படமான ‘பராசக்தி’யின் தலைப்பையே சூட்டியுள்ளதால் இந்தப் படத்திற்கு ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோா் நடிக்கும் இந்தப்படம் தமிழ் மொழிப் பற்று மற்றும் சமூக நீதி குறித்த வரலாற்றுப் பின்னணியை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது Tag Words: #ParasakthiMovie #Sivakarthikeyan #SudhaKongara #MadrasHigh Court #CopyrightIssue #TamilCinema #Pongal2026 #JaffnaNews #BreakingNews

Related Posts