2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதி வருமானம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,380.93 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சவாலான உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளோம். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்கிய மொத்த ஏற்றுமதி 5784.38 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.3 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
மொத்த ஏற்றுமதி 1.38 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 6 சதவீத வருடாந்த வளர்ச்சியைக் காட்டுகிறது. இதில் பொருட்களின் ஏற்றுமதி 9.87 சதவீதமாக அதிகரித்து 1.06 பில்லியன் அமெரிக்க டொலராகவும், சேவைத் துறையின் ஏற்றுமதி 317.16 மில்லியன் அமெரிக்க டொலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சேவைத் துறையின் பங்களிப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான நிலையான தேவை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு, இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து தனது மீளெழுச்சியை நிரூபித்துள்ளது.
2026 இன் முதல் நான்கு மாதங்களில் ஈட்டப்பட்ட 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் மீளெழும் தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஏப்ரல் மாதத்தில் சிறந்த செயல்திறனைக் காட்டிய துறைகளில் தேங்காய் சார்ந்த தயாரிப்புகள், உணவு மற்றும் பானங்கள், மின்சார மற்றும் இலத்திரனியல் உதிரிபாகங்கள், கடல் உணவு, இறப்பர் தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை மற்றும் சேவைகள் அடங்குகின்றன.
தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள், குறிப்பாக விசேடமாக, தேங்காய் நார் பொருட்கள், தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ தேங்காய்ப்பால் ஆகியவற்றின் அதிகரித்த கேள்வியால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23.49 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
ஆடை மற்றும் தேயிலை போன்ற முக்கிய பாரம்பரிய ஏற்றுமதித் துறைகள் இம்முறை சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய சந்தைகளில் ஏற்பட்ட தேவை வீழ்ச்சி காரணமாக, ஏப்ரல் மாதத்தில் ஆடை மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 4.88 சதவீமாக சரிந்து 346.67 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.ஈராக், சவூதி அரேபியா, லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சந்தைகளில் இருந்து தேவை குறைந்ததாலும், மொத்தத் தேயிலை மற்றும் தேயிலை பாக்கெட்டுகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்ததாலும், தேயிலை ஏற்றுமதி வருவாய் 6.82 சதவீதமாக சரிந்து 100.02 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கையின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 22 சதவீத பங்களிப்பைக் கொண்டு அமெரிக்கா தொடர்ந்து முதன்மை ஏற்றுமதி நாடாகத் திகழ்கிறது. அதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் சந்தை இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக மாறியுள்ளது.
தொடர்ச்சியான ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புதிய சந்தைகளை நோக்கிய விரிவாக்கம் மற்றும் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகள் ஆகியன 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.