மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது – Global Tamil News

by ilankai

மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது by admin December 31, 2025 written by admin December 31, 2025 யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் மாடு திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், மீன் பெட்டிக்குள் மறைத்து வைத்து மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தீவகத்தில் இருந்து யாழ். நகர் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்ற போது இன்று புதன்கிழமை அதிகாலை இவர் ஊர்காவற்துறை காவல்துறையினரால் அராலி சந்திக்கு அருகில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டியைக் கட்டிக்கொண்டு, அதற்குள் மறைத்து வைத்து 35 கிலோ மாட்டிறைச்சியை கடத்திச் சென்ற வேளை வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவற்துறை காவல்துறையினா் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளைச் சோதனையிட்டபோது இந்த மோசடி அம்பலமானது. கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தீவகப் பகுதியில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் மற்றும் கட்டாக்காலி மாடுகளைக் களவாடி, அவற்றை மறைமுகமான இடங்களில் வைத்து இறைச்சியாக்கி நகர்ப்புறங்களுக்குக் கடத்தும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மாடுகள் திருடப்படுவதால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இத்தகைய மாட்டுத் திருடர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிர ரோந்துப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தீவக மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். Related News

Related Posts