ஜெர்மனியின் கெல்சென்கிர்சன் (Gelsenkirchen) நகரில் உள்ள ஸ்பார்காஸ் (Sparkasse) சேமிப்பு வங்கிக் கிளையில், ஹாலிவுட் பட பாணியில் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கொள்ளைச் சம்பவம் உலகத்தையே அதிரவைத்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையைச் சாதகமாகப் பயன்படுத்தி, கொள்ளையர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையர்கள் வங்கிக்கு அருகில் இருந்த ஒரு வாகனத் தரிப்பிடத்தின் (Parking Garage) வழியாக நுழைந்துள்ளனர். அங்கிருந்து வங்கியின் தரைத்தளத்தில் உள்ள பெட்டக அறையின் (Vault Room) தடிமனான சுவரை ஒரு பெரிய விசேட துளையிடும் கருவியைப் (Special Drill) பயன்படுத்தித் துளையிட்டுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் முழுவதும் அல்லது வார இறுதியில் வங்கியின் உள்ளேயே தங்கியிருந்து இந்த வேலையைச் செய்திருக்கலாம் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா். பெட்டக அறைக்குள் நுழைந்த அவர்கள், சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்புப் பெட்டிகளை உடைத்து அங்கிருந்த பணம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளைத் திருடியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை வங்கியில் தீயணைப்பு எச்சரிக்கை மணி (Fire Alarm) ஒலித்ததைத் தொடர்ந்து காவல்துறையினா் அங்கு சென்றபோதே இந்தக் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கருப்பு நிற Audi RS 6 காரில் தப்பிச் செல்வது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்தக் காரில் பயன்படுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடு (License Plate) முன்னதாக ஹனோவர் நகரில் திருடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி பரவியதை அடுத்து, நேற்று நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “எனது 25 கால உழைப்பு மற்றும் முதுமைக்கால சேமிப்பு அனைத்தும் இந்தப் பெட்டியில் தான் இருந்தது” என பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். காப்பீட்டுத் தொகையை விட அதிகளவிலான சொத்துக்களை இழந்திருப்பதாகப் பல வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தலைமறைவாக உள்ளனர். சனிக்கிழமை இரவு ஒரு வாகனத் தரிப்பிடத்தின் (Parking Garage) அருகே பெரிய பைகளுடன் சிலர் நடமாடியதாகச் சாட்சிகள் கூறியுள்ளனர். அவர்களைப் பிடிக்க ஜெர்மனி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. வங்கியின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு பாதுகாப்புப் பெட்டியும் (Safe Deposit Box) பொதுவாக 10,000 முதல் 10,300 யூரோக்கள் ($11,000) வரை மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல வாடிக்கையாளர்கள் இதற்கும் அதிகமான மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை வைத்துள்ளனர். 10,000 யூரோக்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதனை அவர்கள் தங்களது தனிப்பட்ட வீட்டு உள்ளடக்கக் காப்பீடு (Home Contents Insurance) மூலம் கோர முடியுமா என்று பார்க்க வேண்டும். ஸ்பார்காஸ் (Sparkasse) வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு விசேட உதவி அழைப்பு எண்ணை (Hotline) உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் விபரங்கள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,700 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த இழப்பு 10 மில்லியன் முதல் 90 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம் என ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. Tag Words: #GermanyBankHeist #Gelsenkirchen #Sparkasse #MoneyHeist #OceanEleven #CrimeNews #30MillionEuros #GermanyNews #TamilNews #BankRobbery
🏦 ஜெர்மனி வங்கியில் 30 மில்லியன் யூரோக்கள் கொள்ளை! – Global Tamil News
5