நீதி கோரும் காவற்துறை  உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன? – Global Tamil...

நீதி கோரும் காவற்துறை  உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன? – Global Tamil News

by ilankai

சூரியகந்த காவல்  நிலையத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவற்துறை  உத்தியோகத்தர் ஒருவர், தனக்கு நீதி வேண்டியும் பாரபட்சமற்ற விசாரணை கோரியும் இரத்தினபுரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, குறித்த காவற்துறை  உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் இதய அறுவை சிகிச்சை (Bypass Surgery) செய்துள்ள இவர், அதற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும் தவிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் O/L பரீட்சைக்குத் தயாராகும் இரு பிள்ளைகள் உட்பட நான்கு பேரைக் கொண்ட தனது குடும்பம் வருமானமின்றி தவிப்பதாக அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். “நான் எனது கடமையைத்தான் செய்தேன். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்னைத் தாக்கினார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி புஷ்பா மாலகாந்தி தெரிவிக்கையில்: “நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி பணியாற்றும் அதே பாடசாலையிலேயே எனது பிள்ளைகளும் கல்வி கற்கின்றனர். அவர் சமூக வலைத்தளங்களில் எனது கணவர் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவிடுவதால், பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகின்றனர். ஆசிரியர்கள் பிள்ளைகளை இதுபோன்ற விடயங்களில் இழுக்கக்கூடாது” என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அந்த குடும்பத்தினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். #SriLankaNews #NPP #PoliceConstable #HumanRights #Justice #Ratnapura #Sooriyakanda #SocialMediaNews #BreakingNews #SriLankaPolitics #தேசியமக்கள்சக்தி #நீதி #இலங்கைசெய்திகள்

Related Posts