யாழ்ப்பாணம் – நல்லூர், ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தானத்தின் (சிவன் கோவில்) வருடாந்த மஹோற்சவ பெருவிழா, இன்றைய தினம் (வியாழக்கிழமை) பக்திப்பூர்வமான கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமானது. ஆரம்பமான மகோற்சவம் காலை வேளையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, உள்வீதி உலா வந்ததைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஈசனின் அருளைப் பெற்றனர். திருவிழா விபரங்கள் இன்றைய தினம் ஆரம்பமான இந்த மகோற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு: தேர்த்திருவிழா: எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 7:00 மணிக்கு சித்திரவேல் ஏந்திய தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. தீர்த்தத் திருவிழா: மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெறும். கொடியிறக்கம்: ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ நிகழ்வுகள் நிறைவுபெறும். பக்தர்களுக்கான வேண்டுகோள் திருவிழா காலங்களில் நடைபெறும் விசேட அபிஷேகங்கள் மற்றும் பூசைகளில் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெறுமாறு ஆலய நிருவாகத்தினர் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் மகோற்சவம், ஆன்மீகச் சூழலில் பக்தி மணம் கமழ நடைபெற்று வருகின்றது.
நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம்! – Global Tamil News
6