மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

by ilankai

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார்.இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவினால் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, சமூகத் தலைவர்கள் தங்களது மதிப்பீடுகள் மற்றும் நிலைமைகளை அமைச்சர் ஜெய்சங்கரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.இதன்போது, டித்வா சூறாவளிக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக இந்தியா முன்மொழிந்துள்ள விரிவான உதவித் திட்டங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் விளக்கினார்.குறிப்பாக, உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு, வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார்.மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனர்த்த காலத்தில் இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்ததுடன், அண்டை நாடுகளுக்கிடையிலான இத்தகைய மனிதாபிமான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு மிக முக்கியமானதாகும் என்றும் தெரிவித்தனர்.இந்தச் சந்திப்பு, டித்வா சூறாவளிக்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமான முயற்சிகளில் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கிடையிலான தொடர்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இந்த சந்திப்பில், மனோகணேசன், செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts