பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: கடந்த சில வாரங்களாக வீடுகளுக்குள் இடுப்பளவு வெள்ளம் புகுந்துள்ள நிலையிலும், கிராம சேவையாளர் நேரில் வந்து பார்வையிடவோ, அனர்த்தப் பதிவுகளை மேற்கொள்ளவோ இல்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கீழ்த்தரமான பேச்சு: தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை: வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் முட்டுக்கட்டை போடுவதாகக் கிராம அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு முரணான செயல்? பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், குறித்த அதிகாரி மக்களை அலட்சியப்படுத்துவதுடன், ஏழை மக்களை இழிவுபடுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடரும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் “பொறுப்பான அரசாங்கம்” முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! – Global Tamil News
2