திருகோணமலை – வெருகல் பகுதியில் இன்று (21) அதிகாலை வெள்ளநீர் உட்புகுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன.அண்மையில் மலைநாட்டில் பதிவாகிய அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக கடந்த வியாழக்கிழமை (18) மாலை உயர்வடையத் தொடங்கிய மன்னப்பிட்டியின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4.99 மீற்றர் வரை உயர்வடைந்து பின்னர் குறைவடையத் தொடங்கியது இதன்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ட்டிருந்தது.இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்ட குறித்த நீரானது இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (21) வெருகல், கங்குவேலி படுகாட்டுப் பகுதியில் பரவி வருகின்றது.இதனால் வெருகல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை கிராமத்தில் 3 வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் பலருடைய வளவுகளுக்குள்ளும் வெள்ளநீர் பரவியுள்ளது. இதன் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கங்குவேலி படுகாடு மற்றும் கருக்குவயல்பகுதியில் வரம்புகளை மூடி வெள்ளநீர் பரவி வருகின்றது. எனினும் ஊருக்குள் வெள்ளநீர் உட்புகுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மன்னம்பிட்டியில் நீர்மட்டம் உயர்வரைந்து பின்னர் தொடர்ச்சியாக குறைவடைந்து வந்ததன் காரணமாக பாரிய வெள்ள ஆபத்து இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
வெருகில் பகுதியில் வெள்ளநீர் 3 வீடுகளுக்கு புகுந்தது
3