கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு யாழில். தேசிய...

கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு யாழில். தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு

by ilankai

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் , விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் , வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக் கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, சட்ட விரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு, எதிர்ப்பை சபையில் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளை விகாரதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுப்பது என சபையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் , அரசியல் கட்சிகள் எவையும் தலைமை தாங்காது . மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். அதன் போது , போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை , தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts