குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) காலை, கொழும்பில் இருந்து சென்ற குற்றவிசாரணைப் பிரிவு (சிஐடி) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டடு விசாரணைகளின் பின்னர் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சிஐடியால் கைது செய்யப்பட்டிருந்தார்.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.இதனடிப்படையில் பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சம்பவ தினமான நேற்று காலையில் அவரது கொண்டையன் கேணியில் உள்ள வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று, விசாரணையின் பின்னர் மாலையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானின் சகாவான அஜித் சி.ஐ.டி.யினரால் கைது பின் விடுதலை!
4