ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 🇱🇰 இலங்கைக்கு $4.5 மில்லியன்...

ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 🇱🇰 இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி! – Global Tamil News

by ilankai

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பாதிப்புகளையடுத்து முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) உடனடி ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ இன்று (08) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களை அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை உடனடி நிவாரண நிதியத்தின் கீழ் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் (4.5 Million USD) நிதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாக மார்க் அண்ட்ரூ அறிவித்தார். இந்த நிதிக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை அவர் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார். நிவாரணத்தில் முன்னுரிமைப் பகுதிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் இந்த உதவி, பின்வரும் அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்: உணவுப் பாதுகாப்பு வீடமைப்பு மற்றும் குடிநீர் கல்வி மற்றும் சுகாதாரம் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை இந்த நிவாரணப் பணிகளுக்காக விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஐ.நா.வின் OCHA (மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம்) அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க் அண்ட்ரூ, “அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக” குறிப்பிட்டார். 🇱🇰 அமைச்சரின் வேண்டுகோள். இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அனர்த்தம் காரணமாக நாட்டின் வாழ்வாதாரம், பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அத்தியாவசியம் என வலியுறுத்தினார். இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவியளிக்கும் நாடுகளுடன் இணைந்து செயற்பட, நியூயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க் அண்ட்ரூ உறுதியளித்தார்.

Related Posts