சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இனி இடமில்லை! – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பு! குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (டிசம்பர் 07) குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அனுமதியற்ற கட்டுமானங்களை நீக்குதல், வீதி சீரமைப்பு மற்றும் அனர்த்த மீட்சி குறித்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இங்கே: 1. அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு முற்றுப்புள்ளி! சட்டம் வலுப்படுத்தப்படும்: எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், இதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இதைச் செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். புதிய பிரிவு: நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ், சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவப்படும். இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்தார். வீதி சீரமைப்புக்கான காலக்கெடு 2 வாரங்களில் சீரமைப்பு: குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து, பொதுமக்களின் போக்குவரத்துக்குத் திறக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். நிதியொதுக்கீடு: தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துமாறும், டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யக்கூடிய பாதைகள் மற்றும் தேவையான நிதி குறித்த தகவல்களை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். விவசாய மீட்சியும் நிவாரணமும் பயிர்ச் செய்கை நிலங்கள்: மாவட்டத்தில் 12,729 ஹெக்டெயார் நெல் வயல்கள் சேதமடைந்துள்ள நிலையில், பயிரிட முடியாத வயல்களுக்குத் தற்காலிக நீர் விநியோகம் வழங்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். கிணறு சுத்திகரிப்பு: கிணறுகளைச் சுத்திகரிக்கும் பொறுப்பை பிரதேச சபைகளுக்கு வழங்கி, முப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடவடிக்கைகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இழப்பீடு: சோளம், காய்கறிகள் மற்றும் கால்நடைப் பண்ணைகள் குறித்து ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது மற்றும் கால்நடைப் பண்ணை தரவுகளைப் பராமரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கை காணி அடையாளம் காணல்: மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பிரதேச செயலாளர்கள் முழுமையாகத் தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார். உன்னத பங்களிப்பு: வீடுகளை இழந்த மக்களுக்காக தமது விகாரைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்க மெத்தெகெட்டிய சங்கமு ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அளுத்கம மங்கள தேரர் முன்வந்ததற்கான ஆவணங்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பில், சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரைகள், புத்தர் சிலைகளுக்கும் பொருந்துமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
🛑 ஜனாதிபதி அவர்களே உங்கள் அறிவிப்பு சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரைகள், புத்தர் சிலைகளுக்கும் பொருந்துமா – Global Tamil News
5