லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் 3 (Terminal 3) பல மாடி வாகன நிறுத்துமிடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சில மர்ம நபர்கள், ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பெண்ணிடமிருந்து சூட்கேஸைத் திருட முயன்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் மீது மிளகுத் தெளிப்பு (Pepper Spray) போன்ற ஒரு எரிச்சலூட்டும் பொருளைத் தெளித்துவிட்டுத் தப்பிச் சென்றதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. 👥 பாதிக்கப்பட்டோர் விபரம்: இந்தத் தாக்குதலில் 21 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர். இதில் மூன்று வயதுச் சிறுமி ஒருவரும் அடங்குவார். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாருக்கும் உயிர் ஆபத்தான காயங்கள் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 🚨 காவல்துறையின் நடவடிக்கை: சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஒரு 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தப்பியோடிய மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தை வந்தடைய முயற்சிக்கும் பயணிகளுக்குச் சில மணி நேரம் போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் மிளகுத் தெளிப்புத் தாக்குதல் – Global Tamil News
4