தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா – இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது. குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை!
3
previous post