யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:காலநிலை மாற்றம் இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அண்மைய காலங்களில் ஒரே மாதத்தில் கொட்டித் தீர்க்கும் மழை, அடுத்த மாதமே வாட்டி வதைக்கும் வறட்சி என நாம் இதுவரை கண்டிராத அனர்த்தங்களைச் சந்தித்து வருகிறோம். இதனை ‘இயற்கையின் கோபம்’ என்று கடந்து செல்வதை விட, ‘இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு’ என்று புரிந்து கொள்வதே சிறந்தது. மழைநீர் வழிந்தோட வேண்டிய பாதைகளை நாம் அடைத்துவிட்டு, வீடுகளுக்குள் வெள்ளம் வருகிறது என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை. வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பல பேரிடர்களுக்கு மூல காரணமாகும்.யாழ். குடாநாடு ஒரு தீவுப் பகுதி. எமக்கு ஆறுகள் இல்லை என்று கருதப்பட்டாலும், மழைநீரை கடலுக்குக் கொண்டு சேர்க்கும் அதேவேளை, நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வழுக்கையாறு போன்ற இயற்கையான வடிகால்கள் எமக்கு உண்டு. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரையில் இது செல்கின்றது. வழுக்கையாறு முறையாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே, வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும்; உவர் நீர் ஊடுருவல் தடுக்கப்படும். அத்துடன், கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும்.உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் தூர்வாரப்படும். முற்காலத்தில் மழைநீரை வீடுகளுக்குள் சேமிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று வீட்டைச் சுற்றி முழுமையாக சீமெந்து இட்டு, மழைநீர் நிலத்தடியில் இறங்க முடியாதவாறு தடுத்து வைத்துள்ளோம்.யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கு நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.பொறியியலாளர்கள் திட்டங்களை வரைவார்கள், ஆய்வாளர்கள் மாதிரிகளைச் செய்வார்கள். ஆனால், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான். இந்தத் திட்டத்தின் வெற்றி உங்கள் கைகளிலேயே உள்ளது. எனவே, வழுக்கையாற்றின் முக்கியத்துவத்தை உங்கள் பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்’ என ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்
6