யாழ்ப்பாணம் – காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்கு வெட்டப்பட்ட மாட்டின் தலையே இவ்வாறு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீதியோரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கழிவுகளை கொட்டுவதால் அங்குள்ள கட்டாக்காலி நாய்கள், பறவைகள் என்பன அந்த கழிவுகளை தூக்கி சென்று வெவ்வேறு இடங்களில் பரப்புகின்றன. இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உண்பதற்கு விலங்குகள் வீதியின் குறுக்கும் மறுக்குமாக செல்வதால் உயிராபத்துகள் கூட ஏற்படுகின்றன. அண்மையில், யாழ். எரிபொருள் நிலையத்தில் கடமை புரியும் இளைஞர் ஒருவரும் குறித்த வீதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் இருக்கின்ற சாதாரண கழிவுப் பொருட்களை பார்வையிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு அபாயகரமான நிலைமை குறித்து கவனிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சீர்கேடான செயற்பாடுகள் குறித்து யாழ். மாநகர சபையினர், மானிப்பாய் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
யாழ். காக்கைதீவு வீதியோரத்தில் மாட்டின் தலை மற்றும் விலங்குகளின் கழிவுகள்
0
previous post