பேரனர்த்தக் காலத்தில் மேலோங்க வேண்டிய தேசிய ஒருமைப்பாடு! து. கௌரீஸ்வரன். – Global Tamil News

by ilankai

உலக வரலாற்றில் இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவாகும் பேரனர்த்தக் காலங்களில் கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் கடந்து பேரனர்த்தத்திலிருந்து உடனடியாக விடுபடுவதற்கான ‘தேசிய ஐக்கியம்’ அல்லது ‘ஒருமைப்பாடு’ ஏற்படுவதை நாம் கற்றறிந்து வருகிறோம். எடுத்துக்காட்டாக, காலனித்துவத்திற்குட்பட்ட உலக நாடுகளின் சந்தைகளைத் தம்வயப்படுத்தும் நோக்குடன் மனித குலத்திற்கு எதிரான அழித்தொழிப்பில் ஹிட்லரும், முசோலினியும் கூட்டாகச் செயற்பட்ட போது, கொள்கையில் (தனியுடமை, பொதுவுடமை) இருவேறு துருவங்களாக இருந்த பிரிட்டனும், சோவியத் ஒன்றியமும் கூட்டணி சேர்ந்து நாஸிகளையும், பாஸிஸ்டுகளையும் எதிர்த்துப் போரிட்ட வரலாற்றைக் கூறலாம். இப்படிச் சிற்றளவிலும், பேரளவிலும் பல உதாணங்கள் இருக்கின்றன. மேற்கு ஐரோப்பா கற்றுத் தந்துள்ள கட்சி சார்ந்த நாடாளுமன்ற சனநாயக முறைமையின் ‘கனவான்’ அரசியல் கலாசாரம் “மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதிப்பதாக இருக்கக் கூடாது”, “எரிகிற வீட்டில் பிடுங்கிற நடவடிக்கையாகவும் இருக்கக் கூடாது” என்பதாகவே அறியப்படுகிறது. இந்த அரசியல் பண்பாட்டை நன்கு அறிந்த இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமது கனவான் தன்மையை அவ்வப்போது வெளிக்காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். சரி பிழைகளுக்கப்பால் இலங்கைத் தமிழர்களின் மிதவாத அரசியல் போக்கின் ஒரு பண்பாகவும் அது கருத்திற்கொள்ளப்படுகிறது. சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கணக்கில் எடுக்காத பேரினவாத எதேச்சாதிகாரம் ஆதிக்கம் செலுத்திய காலங்களிலும்கூட தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் தமது கருத்துகளையும், உள்ளக் குமுறல்களையும் மாற்றுக் கருத்துடையவர்களும் ஏற்கத்தகுந்த விதத்தில் பக்குவமாக எடுத்துக் கூறியிருந்தார்கள். இதனால் ‘கனவான்’ அரசியலை விரும்பும் முதலாளிய தரகுவணிக நலன்பேணும் சிங்கள மேட்டுக்குடி அரசியல் தலைவர்களிடமும், பொதுமக்களிடமும் தமிழ்த் தலைவர்கள் பற்றிய நேர்மறையான மதிப்பீடுகள் இருந்தன. உதாரணத்திற்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பெரும்பாலும் தனது கருத்துகளை ஒரு கனவான் பண்புடனேயே, சரியான ஆதாரங்கள், மேற்கோள்கள், புள்ளி விபரங்கள் முதலானவற்றின் துணையுடன் நாடாளுமன்றத்திலும், பொது வெளிகளிலும் எடுத்துரைப்பார், இத்தகைய அவரது பண்புகளே இலங்கைத் தீவின் கவனிப்பிற்குரிய தமிழ் அரசியல் ஆளுமையாக அவரை அடையாளங் காட்டி நின்றது. மேற்குலக சனநாயக அரசியல் முறைமை என்பது வலுவான எதிர்க் கட்சியை வலியுறுத்துகிறது. இங்கு எதிர்க்கட்சியின் வலு என்பது தனியே உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களைச் சரியாக வழிப்படுத்தும் ஆலோசனைகளைப் பொருத்தமான சூழலில் வழங்கி அவர்களைச் சரியான திசை நோக்கி ஆற்றுப்படுத்தும் கருத்தியல் தெளிவும், கோட்பாட்டுப் புரிதல்களும், விஞ்ஞான பூர்வமாக விடயங்களை முன்வைக்கும் அறிவும்,திறனும் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.. இத்தோடு அரசாங்கத்தைப் போன்ற ஒரு நிழல் மந்திரிசபையினை உருவாக்கி உரிய துறைகளைக் கண்காணித்து, மதிப்பிட்டு விஞ்ஞானபூர்வமாக வழிப்படுத்தும், விமர்சிக்கும் கலாசாரமுள்ள எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதுமே எதிர்க்கட்சி அரசியலின் இலக்கணமாக உள்ளது. ஆனால் இத்தகைய எதிர்க்கட்சிப் பண்பாடு நமது நாட்டில் நடைமுறையில் இருந்ததா என்றால் அது கேள்விக்குரியதாகவே இருந்து வருகிறது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆளும் கட்சி முயலும் போது அதனைத் தடுத்து நிறுத்தித் தோல்வியுறச் செய்யும் எதிர்மறை அரசியலே நமது நாட்டில் நடந்தேறி வருகின்றது. பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அரசாங்கம் கொண்டு வந்த தீர்வுப் பொதி, சுனாமிப் பொதுக் கட்டமைப்பு என்பவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர விடாமல் தடுப்பதில் அக்காலத்தில் எதிரணியில் இருந்தவர்கள் கடுமையாகச் செயலாற்றியிருந்தார்கள். அப்போது எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் எதிரிக் கட்சியாகவே இயங்கினார்கள். இந்த எதிர்மறையான பண்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதனூடாகவே இலங்கைத் தீவை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். இதுவே வரலாறு கற்றுத் தருகின்ற பாடம் வரலாற்றில் நடந்த கசப்பான அனுபவங்களை எதிர்மறை எண்ணத்துடன் வஞ்சம் பாராட்டாமல் அவற்றை எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான படிப்பினையாக எடுத்துரைத்து நேர்மறை எண்ணத்தோடு அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அதற்கேற்ற தகவமைப்புகளுடன் எதிர்க் கட்சிகள் இயங்க வேண்டிய காலத்தை இயற்கை மீண்டும் ஒருமுறை இலங்கைத் தீவுக்குக் கொடுத்துள்ளது. ஆபத்து ஒன்று வருவதை நாட்டின் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் முன்கூட்டியே அறிய வேண்டியது இன்றியமையாதது. இது, நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவற்றைச் சார்ந்த ஒவ்வொரு உறுப்பினரதும் பொறுப்பும், கடமையுமாகும். இது நமக்குரியது அல்ல அரசாங்கத்திற்கேயுரியது என்று பொறுப்பற்றவர்களாக நாடாளுமன்றம் சென்று வந்துவிட்டு, அனர்த்தம் நடந்த பின்னர் அரசைக் குறை சொல்வதில் மாத்திரம் கவனத்தைச் செலுத்துவதும்,   அனர்த்தத்தை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்ய முயல்வதும் நாடாளுமன்ற சனநாயகப் பண்பல்ல. இது தார்மீக அரசியல் பண்பாடாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. சனநாயகப் பண்பாட்டில் மக்களே எசமானர்கள், பகுத்தறிவுள்ள மக்கள் எல்லாவற்றையும் அவதானித்தே வருகிறார்கள். பேரனர்த்தம் வருமுன்னர் எதிர்க்கட்சியினர் அதையறிந்து அரசை எச்சரித்திருந்தால், பேரனர்த்தத்தின் பின்னர் அரசை ஏகோபித்து எதிர்ப்பது நியாயமாகவே இருக்கும். பேரனர்த்தம் ஒன்றை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய தொழில்நுட்பக் கட்டமைப்பு நாட்டில் இல்லாமை பற்றி இப்போது பேசப்படுகிறது. இத்தகைய பொறிகளைக்  கொண்டுவந்து பொருத்தும் முயற்சிகள் கடந்த காலங்களில் பொறுப்புணர்வுடன் நடந்தேறாமை பற்றியும் தற்போது பேசப்படுகின்றது. இதற்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகக் கடந்த காலங்களில் அரசாங்கத்திலிருந்த இன்றைய எதிரணியினர் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் தமது கடந்தகால, நிகழ்கால எதிர்மறைச் செயல்களைச் சுய மதிப்பீடுகளுக்கு உட்படுத்தி, அதிலிருந்து மீண்டு நேர்மறையான வகையில் முன்னோக்கிச் செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே! நாட்டின் பகுத்தறிவுள்ள பிரசைகள் ஒவ்வொருவரும் நமது அரசியல் கலாசாரத்தை அவதானிக்கிறார்கள், மதிப்பிடுகிறார்கள் என்ற புரிதலுடனும், பொறுப்புடனும், தார்மீக நெறியுடனும் எதிர்க்கட்சிகளின் பேரனர்த்தக் காலத்து அரசியல் செயற்பாடுகள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். து. கௌரீஸ்வரன், 03.12.2025

Related Posts