கோல்ட்ரிப்’ இருமல் மருந்து வழக்கு நிறுவன உரிமையாளாின் ரூ 2.04 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ இருமல் சிரப்பைக் குடித்த மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 பச்சிளம் குழந்தைகள் பலியான வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இறந்த குழந்தைகளுக்கும் ‘கோல்ட்ரிப்’ இருமல் சிரப்புக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மருந்தைஇ காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல் மனுஃபக்ச்சர் நிறுவனம் தயாரித்தது தெரியவந்தது. நிறுவன உரிமையாளரான 75 வயது நிரம்பிய ஜி. ரங்கநாதனை மத்திய பிரதேச தனிப்படைப் காவல்துறையினா் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்திருந்தனா். மேலும் சட்டவிரோதமாகப் பணம் கைமாறியமை தெரியவந்ததைத் தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த அமுலாக்கத்துறை ரங்கநாதனின் வீடு, அலுவலகம் உட்படச் சென்னையில் உள்ள 10 இடங்களில் சோதனை நடத்திய போது முக்கிய ஆவணங்கள், நிதி சார்ந்த ஆவணங்கள் மற்றும் கலப்பட மருந்துகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ. 2.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமுலாக்கத்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர். இதில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களும் அடங்கும்.
22 குழந்தைகள் பலி – கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம் – Global Tamil News
0