இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் குணரத்தினம் குணராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டியை அண்டிய கடற்பகுதிக்குள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நூற்றுற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இதனால் 20 மீனவர்களின், சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதிக்கு மேற்பட்ட வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு தெரியப்படுத்தினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்திய மீனவர்களின் இந்த அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனை ஆண்டுகள் தேவை? வாய் பேச்சிற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறினால் போதுமா? தொழில் முதல்களை இழந்த மீனவர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்த விடயம் அரசாங்கத்துக்கு தெரியுமா? நாங்கள் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியிலே கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் எமது தொழில் முதல்களை இவ்வாறு தொடர்ச்சியாக அழித்து வந்தால் நாங்கள் என்ன செய்வது? சட்டவிரோதமாக அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஏன் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை அரசினால் எடுக்க முடியவில்லை? தயவுசெய்து இனியாவது எமது மீனவர்களின் நிலையை அறிந்து விரைவாக ஒரு நிரந்தர நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்றார்.
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் – பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம் – Global Tamil News
3