என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ பாணியை விஞ்சியது. இலங்கையின் கடந்த வார அரசியல் நகர்வு திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பமானது. இங்குள்ள கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நாட்ட சில பிக்குகள் முயற்சி மேற்கொண்டதுடன் விவகாரம் தொடங்கியது. ஆனால் அன்றிரவே காவற்துறையினர் அவ்விடம் சென்று புத்தர் சிலையை அகற்றிச் சென்றனர். உடனடியாக வெளிவந்த செய்திகள், புத்தர் சிலை வைப்பை தமிழரசுக் கட்சியினர் ஆட்சேபித்ததால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவையடுத்து அது அகற்றப்பட்டது என்பதாக இருந்தது. சிங்கள பௌத்த ஆட்சியில் அப்படியும் நடந்துள்ளதே என்ற அதிர்ச்சி மகிழ்ச்சியில் இரவைக் கழித்துவிட்டு எழுந்தபோது, மறுநாள் திங்கட்கிழமை எல்லாமே தலைகரணமாகியது. முதல் இரவு புத்தர் சிலையை தூக்கிச் சென்ற காவற்துறையினரே மீண்டும் அதனைக் கொண்டு சென்று அதேயிடத்தில் வைத்து காவல் புரிந்தனர். “போன புத்தர் மீண்டு வந்தார்| என்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு புதுக்கதையைச் சொன்னார். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முதல் இரவு சிலை அகற்றப்பட்டதாகவும், அதற்குரிய பாதுகாப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மீள அதனை வைப்பதற்கு உத்தரவிட்டதாகவும் இவரது அறிவிப்பு இருந்தது. ஒரு புத்தர் சிலையை வைத்து இடம்பெற்ற ஒரு குறுநாடகம் பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டில் பாதுகாப்புக்கு அச்சமில்லை, எல்லா நடவடிக்கைகளும் கண்காணிப்பில் உள்ளன, சகல செயற்பாடுகளும் சட்டப்படியே இடம்பெறுகிறது என்று ஜனாதிபதியிலிருந்து கட்சியின் பின்வரிசை உறுப்பினர் வரை அனைவரும் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படியென்றால் புத்தர் சிலையை அனுமதியின்றி நாட்ட எடு;த்த முயற்சியை பாதுகாப்புக்கு பொறுப்பான எவரும் அறிந்திருக்கவில்லையா? திருமலை என்பது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் தெரியாமலா இரவோடிரவாக இங்கே புத்தர் வந்தார்?அமைச்சரின் உத்தரவின்பேரில் காவற்துறையினர் சிலையை அகற்ற முற்பட்டபோது பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? ஆனால், இரண்டு பிக்குகள் சிறு காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டவேளை சுகவீனமடைந்து(?) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்று இதுவும் ஒரு நாடகமா?புத்தர் சிலை விவகாரம் என்பது திருமலையை முழுமையாக சிங்கள பௌத்த மாவட்டம் ஆக்கும் முயற்சியின் இன்னொரு கட்டம் என்பதை நினைவூட்டுகிறது 1968ம் ஆண்டுச் சம்பவம். அப்போது டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளாட்சி அமைச்சராக இருந்தார். இவருக்கு எதையும் தெரிவிக்காது திருக்கோணேஸ்வரம் பகுதியை புனித நகரமாக பிரதமர் டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்தார். இதனால் அவமதிப்புக்குள்ளான அமைச்சர் திருச்செல்வம் தமது பதவியை விட்டு விலகினார். இது 1968 நவம்பரில் இடம்பெற்றது. இப்போது 57 ஆண்டுகளின் பின்னர் அதே நவம்பர் மாதத்திலேயே பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்துக்கு அருகாமையில் புத்தர் சிலையை முளைக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் என்பது திருமலையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு ஒரு சோதனையான மாதம்போல் தெரிகிறது. இப்போது புத்தர் சிலை நடுவதை தமிழரசுக் கட்சியினர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பிக்கள் அனைவரையும் (எண்மர்) பதவிகளைத் துறக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அறிவிப்பு விடுத்தார். மட்டக்களப்பு எம்.பி. சாணக்கியன் ஒருபடி மேலேறி அநுர அரசாங்கத்தின் தமிழ் எம்.பிக்கள் அங்கிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார். இருவரது வேண்டுகோளுக்கும் இடையிலான வேறுபாடு மிக நீளமானது. அந்த எட்டு எம்.பி.க்களும் இதனை செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் விடுக்கப்பட்ட அர்த்தமற்ற கோரிக்கையுடன் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தாமும் சேர்ந்து கொள்ளாது தப்பியது புத்திசாலித்தனமானது. புத்தர் சிலை விவகாரம் இடம்பெற்ற மூன்றாம் நாள் – கடந்த புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமரவுடன் தமிழரசுக் கட்சியினரின் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. இதற்கான வேண்டுகோளை தமிழரசுக் கட்சியினரே எழுத்து மூலம் விடுத்திருந்தபோதும் பல மாதங்களாக பதில் கிடைக்கவில்லை. அண்மையில் சானக்கியனின் குடும்ப உறவினரது இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பங்குபற்றியபோது அவருடன் உரையாடிய சுமந்திரன் தங்கள் கடித விவகாரத்தினை நினைவூட்டினார். அதன் பின்னரே சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. கட்சியின் எட்டு எம்.பிக்களுடன் பதில் தலைவரும், பதில் செயலாளரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர். தமிழரசுக் கட்சயினர் என்னென்ன விடயங்களையிட்டு தம்முடன் உரையாடுவார்கள் என்பது அநுர குமரவுக்கு நன்கு தெரியும். அதற்காக அவர் தம்மை தயார்படுத்தியிருந்தார் என்பதை சந்திப்பின்போது அவர் கையாண்ட விதமும் முகபாவனையும் நன்றாகத் தெரியப்படுத்தியது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக ஓர் ஆணைக்குழுவை அமைக்கவுள்ள யோசனையை அவர் முன்வைத்தார். இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இது என்பது நன்றாக விளங்கியது. தேர்தல் பரப்புரைக் காலத்தில் தமது குடும்பத்திலும் பலர் காணாமல்போனதால் இதன் பாதிப்பு தமக்குத் தெரியுமென்று கதை அளந்ததை அவர் ஒரு வருடத்தில் மறந்துவிட்டார் போலும். தனியார் காணிகளை ராணுவத்திடமிருந்து விடுவிப்பது தொடர்பில் மழுப்பல் பதிலை வழங்கினார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் உரியவர்கள் இன்னமும் அக்காணிகளில் குடியேறவில்லை என்று கூறி, பந்தை திருப்பியடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எனினும், தாம் சொன்னவாறு காணிகள் மீளளிக்கப்படும் எனச்சொல்லி சமாளித்துவிட்டார். அரசியல் கைதிகள் விடுதலைக்கு சரியான பதிலை அவரால் வழங்க முடியவில்லை. முன்னைய ஜனாதிபதிகள் பாணியில் வெவ்வேறு காரணங்களைக் கூறி விடயத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தார். இதிலும் சமாளிப்புத்தான் இடம்பெற்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற வேண்டுமென்பது இச்சந்திப்பின் மையப் புள்ளியாக இருந்தது. நிச்சயம் தேர்தல் நடைபெறுமென்று நம்பும் வகையில் பதிலளித்தார். ஆனால், எப்போது என்று கூற மறுத்துவிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிய இவரால் தேர்தல் எப்போது என்று கூற முடியவில்லை. 1965 – 1970 ஆண்டுகளின் ஐந்து ஆண்டுகளிலும் வரவு செலவுத் திட்டங்களிலும் தமிழருக்கு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசு நிதி ஒதுக்கியதாயினும் அந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு அத்திவாரம்கூட போடவில்லை என்பது இவ்வேளையில் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலை நடத்த பச்சைக்கொடி காட்டாதவரை இத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியமில்லை. அதுவரை அனைவரையும் ஏமாற்ற ஒவ்வொரு வருடமும் பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொண்டு போகலாம் என்ற நிலைப்பாட்டில் அநுர இருக்கிறார். தமிழரசுக் கட்சிக்கு வடமாகாண சபையையும், முதலமைச்சர் பதவியையும் வழங்குவதற்கு தேர்தலை எதற்காக நடத்த வேண்டுமென்ற சிந்தனை ஜே.வி.பி.யிடம் இருக்கிறது. பேச்சுகளின் முக்கியமான அம்சமாக புதிய அரசியலமைப்பு இருந்தது. முன்னைய ஆட்சியில் தமிழரசுக் கட்சியின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆவணங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென தேர்தல் பரப்புரை காலத்தில் அநுர குமர தெரிவித்திருந்தார். இதனை நம்ப வைக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றபோது கட்சியின் முதியோர் கிளப் பிரமுகர்கள் முண்டியடித்து அநுரவுடன் சுமந்திரனையும் இணைத்து படமெடுத்துக் கொண்டாடினர். புதிய அரசியலமைப்பு உருவாக்;கப்படும்போது சுமந்திரனின் ஆலோசனை பெறப்படும் என்று அவர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. அது சும்மா சொன்னது என்ற பாணியில் இச்சந்திப்பில் அநுர நடந்து கொண்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்பதை உறுதியாகக் கூறினார் – ஆனால் எப்போது என்று கூறவில்லை. இதற்கென ஒரு பொறிமுறையை உருவாக்குவது, வல்லுனர்கள் மூலம் வரைபைத் தயாரிப்பது, கட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற குழுவின் ஊடாக அதனை நிறைவேற்றுவது என்று விளக்கம் கொடுத்தார். ஏற்கனவே டான் தொலைக்காட்சியில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்த விடயங்களை கிளிப்பிள்ளைபோல தமிழரசுக் கட்சியிடம் ஒப்புவித்தார். புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை இருக்காது என்று ரில்வின் சில்வா தெரிவித்திருந்ததை சாதுரியமாக மறைத்துவிட்டார். இதற்கு மேல் இச்சந்திப்பில் பேச ஒன்றுமில்லை. தமிழரசுக் கட்சியிடமும் அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை. இச்சந்திப்புக்கு மறுநாள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சாணக்கியனின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ரத்துச் செய்யப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது. திருமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் நீதிமன்றத்தில் தங்கியுள்ளது போலவே இதுவும். கஞ்சி ஆறும்போது சிங்கள பௌத்தம் புத்தர் சிலைக்கு சவாலாகாது போகும். இச்சந்திப்பின் இறுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ருசிகரமானது. முல்லைத்தீவு மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியால் சந்திக்கும் இடர்கள் பற்றி வன்னி எம்.பி. ரவிகரன் சுட்டிக்காட்டியபோது தாம் நேரில் வந்து அவர்களுடன் பேசவிருப்பதாகப் பதிலளித்து ஒரேடியாக விடயத்தை மூடிவிட்டார் அநுர குமர. (அதனை நான் கவனிக்கிறேன், நீர் பேசாமல் இரும் என்ற பாணியில் இது அமைந்தது). ஆவலோடு எதிர்பார்த்த முதல் சந்திப்பு முடிந்துவிட்டது. இது தொடர்பாக ஷவீடு|க்கு எடுத்துச் செ(h)ல்ல ஒன்றுமேயில்லை. பத்துப்பேரை தனியனாக மடக்கிய அநுரவின் சாதுரியமான விடைகளுள் எல்லாமே முடக்கப்பட்டுவிட்டன. அடுத்த ‘எபிசோட்’ எப்போது?
வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த 'எபிசோட்' எப்போது? பனங்காட்டான்
1