கொழும்பு – கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (22) காலை கனேதென்ன பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நான்கு பேர் இதுவரையில் மீட்கப்பட்டு, மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர், தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது துரிதப்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த வர்த்தக நிலையமானது, சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்துவதற்காகப் பலர் விரும்பிச் செல்லும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் மண்சரிவு – வீடு பலத்த சேதம்! நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21.11.25) பிற்பகல் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையே இந்த மண்சரிவுக்குக் காரணம் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்மேடு இடிந்து விழுந்ததால் வீட்டின் ஏனைய சுவர்களும் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால், அந்த வீட்டில் வசித்த 05 பேர் தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் சேத விபரங்களைச் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு – கண்டி வீதி – தற்காலிகமாக மூடப்பட்டது – மண்சரிவால் ஒருவர் பலி! – Global Tamil News
9