யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே அவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் , ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 1259 மில்லியன் ரூபா 2025 ஆம் ஆண்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முடிவுறுத்தப்படாமல் இருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக்கப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிகிறது, இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு ஜனாதிபதி , என்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளார்.மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இக் கலந்துரையாடல் மேலதிக செயலர், மேலதிக செயலர் (காணி), யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர், தாளையடி நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் கடந்தும் யாழில். மீள் குடியேற்றம் பூர்த்தி முழுமையடையவில்லை
0
previous post