இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த ஒருவரையுமாக மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர் அத்துடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் படகொன்றினையும் , கடத்தல்காரர்களை ஏற்றி செல்வதற்காக தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிளையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இந்தியாவில் இருந்து படகொன்றில் 350 கிலோ கேரளா கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்படுவதாக , யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , தடங்காட்டி (GPS) உதவியுடன் , காவற்துறையினர் யாழ்ப்பாண கரையோர பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர். கஞ்சா கடத்தி வரும் படகினை எதிர்பார்த்து காவற்துறையினர் காத்திருந்த வேளை படகில் இருவர் மாத்திரமே கரை திரும்பியுள்ளனர். அதனை அடுத்து படகில் வந்த இருவரையும் கைது செய்த காவற்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , படகு கரையொதுங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் , இருவரையும் அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 130 மில்லி கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட படகு , மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து கா வற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை இருவராலும் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் , கடலில் வைத்து வேறு படகுக்கு மாற்றபட்டு இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல் – மூவர் கைது! – Global Tamil News
1