யாழில். விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – 21 மாணவர்களின் எதிர்காலம் “?”

by ilankai

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சையில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதி விடைத்தாள் அதிகாரிகளின் கவன குறைவால் திருத்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரியல் பாடத்தில் 21 மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் , அவற்றினை ஒன்றாக கட்டி , ஏனைய காகித தாள்களுடன், சேர்த்து வைத்துள்ளனர். பின்னர் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை பெற்று , அவற்றினையும் ஒன்றாக சேர்ந்து கட்டிய பின்னர் , முதலாம் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை திருத்தல் பணிக்காக அனுப்ப வேண்டிய வேளை , முதலாம் பகுதி விடைத்தாள்களை மறந்து , இரண்டாம் பகுதி விடைத்தாள்களை மாத்திரம் திருத்தல் பணிக்காக கையளித்துள்ளனர். மூன்று நாட்களின் பின்னர் , பரீட்சை மண்டபத்தில் காணப்பட்ட , காகித கட்டுக்களை மீள அடுக்கிய போதே , அதற்குள் உயிரியல் பாட விடைத்தாள்கள் காணப்பட்டமையை கண்டுள்ளனர். அவற்றினை மூன்று நாட்களின் பின்னர் திருத்தல் பணிக்காக அனுப்பிய போது , அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட கல்வி திணைக்கள அதிகாரிகள் , அன்றைய தினம் பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய அனைவரையும் அங்கிருந்து நீக்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 21 மாணவர்களுக்கும் அடுத்த கட்டம் என்ன தீர்வினை வழங்குவது என்பது தொடர்பில் பரீட்சை திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தவறினால் , எமது பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகி விட்டதே  இதற்கு ஒரு நல்ல தீர்வினை வழங்க வேண்டும், என பெற்றோர் கோரியுள்ளனர். 

Related Posts