அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி – மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார்-தேவதாஸ் கமலா திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வாறிருக்க, கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார், கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்திவிட, பிள்ளைகளான பள்ளி செல்லும் பிஞ்சுகள் இரண்டும், தந்தையைப் பிரிந்து தாயையும் இழந்து நிர்க்கதி நிலையுற்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.அத்தருணத்தில், அவர்களது பேத்தியாரான கமலா, தனது இயலாமை முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் அந்தப் பிள்ளைகளை பார்த்துப் பராமரித்து வந்திருந்தார்.இன்று, அந்தத் தாயாரும் உயிர் நீத்தமையானது, அந்தப் பிள்ளைகளின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அந்த மூத்த தாயார் தனது இறுதி மூச்சுவரை இந்தப் பேரக்குழந்தைகளுக்காகவே தனது சுவாசத்தை அர்ப்பணித்திருந்தார் என்பது மனங்கொள்ளத்தக்கது. இந்நிலையில், சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற இந்தப் பள்ளிப் பிஞ்சுகளின் தந்தையான, ‘அரசியற் கைதி ஆனந்தசுதாகர்’ விடுதலைபெற்று வீடுதிரும்பி, அந்த குழந்தைகளை அரவனைத்துப் பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும். அன்னாரது நல்லாத்மா பரமன் பதமடைய பிரார்த்திப்பதோடு, துயர் சுமந்து வாழும் பேரக்குழந்தைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு, தனது ஆழ்ந்த அனுதாபங்ளை தெரிவித்துக்கொள்கிறது.
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே
8