திருகோணமலை விகாரை குறித்த நீதிமன்ற உத்தரவு – Global Tamil News

திருகோணமலை விகாரை குறித்த நீதிமன்ற உத்தரவு – Global Tamil News

by ilankai

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது எனவும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.என்.எம். சம்சுதீன் விஹாராதிகாரி தேரருக்கு  இன்று புதன்கிழமை  (19) உத்தரவிட்டுள்ளாா். திருகோணமலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.எல். அஜித் குமார, துறைமுக  காவல்துறை  பொறுப்பதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் சமர்ப்பித்த பீ அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாராதிகாரி தேரர் தற்காலிக கட்டிடம் கட்டுவது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட  முறைப்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான  முறுகல்  தொடர்பாக காவல்துறை இந்த பீ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. முன்வைக்கப்பட்ட   வாதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு துறைமுக காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின் நகல்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஹாராதிகாரி தேரர் மற்றும் தயாக சபையின் செயலாளரிடம் ஒப்படைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts