விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழையும் சலுகையை அந்நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் ரத்து செய்துள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய கடந்த 2024-ம் ஆண்டில் அந்நாட்டின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் நாடு இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை தற்போது ஈரான் ரத்து செய்துள்ளது. வரும் நவம்பர் 22-ம் திகதி முதல், சாதாரண கடவுச்சீட்டுக் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஈரான் நாட்டுக்குள் நுழைய பயணத்துக்கு முன்பாகவே விசாவை பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாபை சேர்ந்த 3 பேர் ஈரானில் கடத்தப்பட்டனர். ஈரானில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கடத்தப்படுவது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விசா இல்லாமல் ஈரான் வரும் இந்தியர்களை கடத்தி வைத்து பிணைத் தொகை கேட்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும், ஈரானுக்கு விசா இல்லாமல் வந்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்தே விசா இல்லாமல் ஈரானில் நுழையும் சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழையும் சலுகை ரத்து! – Global Tamil News
6