அநுராவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு: என்ன நடந்தது? சுமந்திரன் என்ன சொல்கிறார்!

அநுராவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு: என்ன நடந்தது? சுமந்திரன் என்ன சொல்கிறார்!

by ilankai

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்புக் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:-ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருட நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் தலைமையில் பாராளுமன்றம் அமையப்பெற்று ஒரு வருடத்தின் பின்தான் இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக தெரிவித்த விடயம், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியலமைப்பு துரிதமாக நடைமுறைக்கு வரும் என்பதே. ஆனால் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம்.எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்துள்ளார்.அத்துடன் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று உள்ளது. இது தொடர்பாகவும் நாம் அவரிடம் கேட்டிருந்தோம். அதற்கு ஜனாதிபதி தெரிவித்தார். நாங்கள் 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்திவிட்டோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சொற்ப காலங்கள் உள்ளது. ஆனால் நாம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கினார். எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சொல்லவில்லை.மாகாணத்தில் இருந்து அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படக் கூடாது  என்பது தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் எமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.ஜனாதிபதி அனைத்தையும் செவிமடுத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் எம்முடன் கலந்துரையாடினார். முக்கியமான பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன.தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். அதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.திருகோணமலை புத்தர் சிலை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நாம் எடுத்துரைத்துள்ளோம். இதை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் பலர் உள்ளனர். கடந்த இரு தினங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் குறித்த பகுதிக்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்பது எங்களது திடமான கருத்து. ஆனால் அதேவேளையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகளை அமைத்து ஆதிக்கத்தை காட்டுவது இனங்களுக்கிடையில் எவ்விதமான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நாம் ஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்று சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்  இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எஸ். சிறிநேசன், எஸ். சிறீதரன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts