வலையில் சிக்கிய 112 கிலோ 'மெகா சைஸ்' மீன் – Global Tamil News

by ilankai

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு  மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட ‘மெகா சைஸ்’ மஞ்சள் வால் கேரை மீன் இன்று (18) அதிகாலை  சிக்கியதால்   மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 50க்கும் அதிகமான  நாட்டுப்படகுகள்  நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீனவர்கள்  மீன் பிடித்து விட்டு இன்று பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான   படகில்  சுமார்  3 மீட்டர் நீளம் கொண்ட  115 கிலோ எடை கொண்ட  மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது. பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112  கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை  கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றுள்ளாா்.  ஒற்றை மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.  இதனால்  மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மஞ்சள் வால் கேரை  மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்து விடுவேன் என கேரள வியாபாரி தெரிவித்தார். வாள் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படும். அவை வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடியவை.இந்த வகை மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியது.  வழக்கமாக 3 மீ நீளம், மற்றும் அதிகபட்சம் 4.55 மீ நீளம் மற்றும் 550 கிலோ  எடை வரை வளரக் கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts