திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளின் போது நிறுவப்பட்ட புத்தர் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் , அகற்றப்பட்ட நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் மீண்டும் அவ்விடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் சிலை நிறுவப்பட்டுள்ளது. திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவில் ஆரம்பிக்கப்பட்டன.இது தொடர்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிலையில் அங்கு பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. பின்னர் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் பணித்தனர்.ஆனால் அதனை பொருட்படுத்தாது நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்விடத்துக்கு வந்த பொலிசார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது, பின்னர் பொலிசார் புத்தர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தம்முடன் எடுத்து சென்றனர். . இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.இந்நிலையில், இன்றைய தினம் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை மீண்டும் அங்கு கொண்டுவரப்பட்டு, புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
திருமலையில். பொலிஸாரிடமிருந்து மீண்டு வந்த புத்தர்
3
previous post