ஜனாதிபதி அநுர குமர விரைவில் தங்களுடன் பேச்சு நடத்தவிருப்பதால் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை தமிழரசுக் கட்சி தவிர்த்தது நல்லெண்ண அறிகுறியா அல்லது அதன் பலவீனமா? இன்றைய அரசியல் சுவாத்தியத்தில் தமிழர் தரப்பு பேச்சு நடத்த நம்பகமான பொருத்தப்பாடுடையவர் ஜனாதிபதி அநுரவா? அல்லது ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவா?அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு (பாதீடு) திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்பார்த்ததுபோல 160 வாக்குகளைப் பெற்று 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. 42 வாக்குகள் மட்டுமே எதிராகக் கிடைத்தன. எதிரணியிலிருந்துவரும் மலையக மக்களின் பிரதிநிதிகளான மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வரவு செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டமைக்கான நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. இவர்கள் நால்வரும் முன்னைய ஆட்சிகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.இரண்டாம் வாசிப்பின் மீதான சகல விவாதங்களிலும்; இதனை எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கூறப்படாமை, பாதுகாப்புத்துறைக்கு அதீத ஒதுக்கீடு ஆகியவைகளை கண்டித்து உரையாற்றியது. ஆனால், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதி விரைவில் தங்கள் வேண்டுகோளை ஏற்று தங்களுடன் பேசவிருப்பதால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வார் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையால் இதனை எதிர்த்து வாசக்களிப்பதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் வாக்களிப்பிலிருந்து விலகுவதாக இவர்கள் அறிவித்தனர். இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அரசு தரப்பு தமிழர் விவகாரத்தில் செய்யத் தவறியவைகளை சுட்டிக்காட்டி தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த தமிழரசு கட்சி எம்.பிக்கள், ஜனாதிபதி அநுரவை கோபப்பட வைக்கக்கூடாதென கருதியே வாக்களிப்பில் பங்குபற்றுவதை விலக்கிக் கொண்டனராம். அதாவது, அவரை கோபப்பட வைத்தால் எதிர்பார்க்கப்படும் அவருடனான சந்திப்பில் பலன் கிடையாது என்பது இதற்கு அர்த்தம். கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டாரநாயக்கவிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வரையான அனைத்து ஆட்சித் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தமிழினம் (ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வார்த்தையில் இது தமிழ்ச்சாதி) இதற்கு முன்னர்; ஒருபோதும் ஆட்சிக் கதிரையில் ஏறாத ஜே.வி.பி.யில் (தேசிய மக்கள் சக்தி) நம்பிக்கை வைத்துள்ளது. இதனால், அந்த நம்பிக்கை வீணாகக்கூடாது என்ற அச்சத்தில் அரசை எதிர்த்து வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போதெல்லாம் சில நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. எனினும், வாக்களிப்பு நிறைவேறிவிடும். ஆனால், இலங்கை அரசு எப்போதும் வாக்களிக்காத நாடுகளின் எண்ணிக்கையை இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து அறிவிப்பதுண்டு. இந்த வரிசையில், தமிழரசுக் கட்சி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததை தமக்கு ஆதரவான வாக்குகளாக அநுர தரப்பு சேர்த்துக்கூற முடியும். அல்லது தமி;ழரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லையென்று கூறுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சின் மீதும் தனித்தனியாக விவாதம் இடம்பெறும். தமிழினப் பிரச்சனை தீர்வு, மகாவலி திட்ட சிங்கள குடியேற்றம், தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகள் நிறுவுதல், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, பாதுகாப்பு அதிக நிதி ஒதுக்கீடு என்று ஒவ்வொரு விடயத்திலும் தமிழரசு எம்.பிக்கள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள். டிசம்பர் ஐந்துக்கு முன்னர் அநுர குமர இவர்களைச் சந்தித்து ஏதாவது உறுதியளித்தால் மூன்றாவது வாசிப்பின்போது மௌனமாகி விடுவார்களா அல்லது இதிலும் வாக்களிக்காது தவிர்த்துக் கொள்வார்களா? அநுர குமர தந்திரமான அரசியல்வாதி. வசீகரமான தோற்றத்தோடு நம்பிக்கை ஊட்டும் வகையில் நைசாகப் பேசக்கூடியவர். மாகாண சபைத்தேர்தல் நடக்கும் என்பார் – ஆனால் எப்போது என்று சொல்ல மாட்டார். புதிய அரசியலமைப்பில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்பார் – அதுவும் எப்போது என்று சொல்ல மாட்டார். தமிழரசுக் கட்சியின் எட்டு எம்.பிக்களுடன் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் அநுரவை சந்தித்து உரையாட ஆவலோடு காத்துள்ளனர். இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு காத்திருந்து ஏமாந்த நிலைமை வராது என நம்புகின்றனர். தேசிய மக்கள் அரசு தமிழர் பிரச்சனை விவகாரங்களில் எவ்வாறு செயற்படப் போகிறது என்பதை அறிய வேண்டுமானால் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியை உணர்ந்து கேட்க வேண்டியது அவசியம். என்.பி.பி. என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரிவதாகச் சொல்லப்பட்டாலும் இதனை ரிமோட்டில் இயக்குவது ஜே.வி.பி. 1971லும், 1987 – 1989லும் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிய சேகுவேரா என்பது இதன் முன்னைய பெயர். றோஹண விஜேவீர உட்பட ஆயிரமாயிரம் தோழர்களை அரச ஆயுதங்களுக்கு பலி கொடுத்தவர்கள் இவர்கள். இறுதியில், ஜனநாயக ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. ரஷ்யா, சீனா, கியுபா என்று பரவலாக அறியப்படும் நாடுகளின் சித்தாந்தத்தில் பிறப்பெடுத்த அமைப்பு இது. சீனாவே இவர்களின் நட்பார்ந்த தோழமை நாடு. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அநுர குமர, பிரதமர் ஹரிணி அமரசேகர, மூத்த அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் பிமல் ரத்னநாயக்க உட்பட பலர் சீன விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தமது தோழர் பட்டாளத்துடன் சீனா சென்று முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார். நாடு திரும்பிய இவர் முதலாவதாகத் தெரிவித்த முக்கிய விடயம், ஒரு அரசாங்கம் தனது திட்டங்களை முழுமையாக செயற்படுத்த 15 – 20 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டுமென்பது. சீனத் தலைவர்கள் தம்மிடம் இதனைத் தெரிவித்ததாக இவர் கூறியிருந்தார். டான் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த செவ்வியில், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்போது மாகாண சபை முறைமை நீக்கப்படும் என்ற கருத்தை ஒளிவு மறைவின்றி கூறியிருந்தார். அதேசமயம், புதிய வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை 2026ம் ஆண்டில் நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். எனினும், புதிய எல்லை நிர்ணயம் முடிவடைந்த பின்னரே இத்தேர்தல் நடைபெறுமென்றும் இவர் குறிப்பிட்டிருந்தார். புதிய எல்லை நிர்ணயத்துக்கு மூன்று ஆண்டுகள் செல்லலாமென்ற விடயமும் ஆட்சித் தரப்பால் சொல்லப்படுகிறது. அப்படியானால் இது முடிவடையும்போது இந்த அரசின் பதவிக்காலம் நான்காவது ஆண்டைத் தாண்டிவிடும். அப்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவைகளுக்கான வேலைகள் மும்முரமாக இருக்கும். இவ்வேளையில் மாகாண சபைத் தேர்தல் பற்றி யாருமே பேச மாட்டார்கள். அது காணாமலே போய்விடும்.. புதிய அரசியலமைப்பு என்பதும் கானல் நீராகவே மாறலாம். இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்தபோது டொனமூர் அரசியலமைப்பும் சோல்பரி அரசியலமைப்பும் இருந்தன. 1972ல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க சிறீலங்கா சோசலிச குடியரசு என்ற பெயருடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தினார். சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவிருந்த ஒரேயொரு அம்சமான 29(2)ம் பிரிவு இதனால் பறிக்கப்பட்டது, 1977ம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978ல் அதிமேதகு ஜனாதிபதி என்ற பதவியுடனான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றினார். அடுத்த பத்தாண்டுக்குள் இந்த அரசியலமைப்புக்கு 14 திருத்தங்களைக் கொண்டு வந்த சாதனைமிகு தர்மி~;டர் இவர். தங்கள் பிறப்புரிமையைக் கேட்ட தம்pழரருடன் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று ராணுவ துப்பாக்கிகளை தூக்கிக் காட்டியவரும் இவரே. 47 ஆண்டுகளின் பின்னர் புதிய அரசியலமைப்பினூடாக சகலரின் பிரச்சனைகளும் தீர்க்கப்படுமென்று ரில்வின் சில்வா கூறுகிறார். அந்த புதிய அரசியலமைப்பில் ராஜிவ் – ஜே.ஆர். ஒப்பந்தத்தால் பிறந்த மாகாண சபை முறைமை நீக்கப்படுமென்றும் கூறியுள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சித்தரப்பில் யாருடன் நம்பிப் பேச முடியும்? அதற்கான நம்பகத்தன்மை உள்ளவர் யார்? ஜே.வி.பி.யின் அலங்கார தேசிய மக்கள் ஆட்சியின் முகமாக அநுர குமர நிறுத்தப்பட்டுள்ளார். இதன் நாடியும் நாளமுமாக இருப்பவர் ரில்வின் சில்வா. அப்படியானால் தமி;ழர் தரப்பு யாருடன் பேச்சு நடத்த வேண்டும்? அநுர குமர திஸ்ஸநாயக்கவுடனா அல்லது ரில்வின் சில்வாவுடனா?
தமிழர் பிரச்சனையை ஆட்சியாளர் தரப்பில் யாருடன் பேசலாம்?நம்பகமானவர் யார்? பனங்காட்டான்
1
previous post