இளைஞர் பரிமாற்ற நல்லிணக்க வேலைத்திட்டம்! – Global Tamil News

by ilankai

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளனமும்  இணைந்து  நாடாத்திய இளைஞர் பரிமாற்ற  நல்லிணக்க  வேலைத்திட்டத்தின் ஆரம்ப மற்றும் அறிமுக நிகழ்வும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில், குருநாகல், கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கேகாலை ,மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 160 இளைஞர் யுவதிகள் பழைய பூங்காவிலிருந்து மாவட்டச் செயலகத்திற்கு சம்பிரதாய முறைப்படி அழைத்து வரப்பட்டு , மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் விருந்தினர்களாக   யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் கே.டி.சி.ஹாமினி, யாழ்ப்பாண பிரதேச செயலாளர் யு.சிவகாமி, யாழ்ப்பாண  மாநகரசபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளருமான ஸ்.கபிலன், வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத் தலைவர் ரி. திருச்செந்தூரன் ஆகியோர் பங்குபற்றினார்கள். அதேவேளை  ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்த இளைஞர் யுவதிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் யுவதிகளின் வீடுகளில் தங்கியிருப்பார்கள். அந்தவகையில், குருநாகலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகள்  ஊர்காவற்றுறைக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்தவர்கள் நெடுந்தீவுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து வருகை தந்தவர்கள்  வேலணைக்கும், கேகாலைக்கும் வருகை தந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், மொனராகலையிலிருந்து வருகை தந்தவர்கள் காரைநகரிற்கும் சென்று  அவர்களுடன் இணைந்து பழகுவதனூடாக  நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதே இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்காகும் என தெரிவிக்கப்பட்டது.

Related Posts