மாணவர்கள் விழிப்புணர்வு தேவை!

by ilankai

சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் இன்று சனிக்கிழமை மாலை (08.11.2025) நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவித்ததாவது, உங்கள் பாடசாலை இப்பிரதேசத்தில் நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சிறப்புப் பெற்ற கல்வி நிலையமாக திகழ்கின்றது. நான் பல இடங்களில் வலியுறுத்தும் செய்தி ஒன்றே — எந்த நிறுவனத்தின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அதன் தலைமைத்துவத்தைச் சார்ந்தே அமைகின்றது.இப்பாடசாலையின் தற்போதைய அதிபர் சிறந்த தலைமைத்துவத்துடன் பாடசாலை நிர்வாகத்தை முன்னெடுத்து வருகிறார் என்பதை, இந்தப் பாடசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பே தெளிவாகச் சான்றாக காட்டுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்;. ஆனால் தலைமைத்துவம் உறுதியானதாக இல்லாவிட்டால் அந்தச் சூழல் சிறக்காது.மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. நாளைய சமூகத்திலும் அரசியல், நிர்வாக, கல்வி மற்றும் பிற துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கப் போவது நீங்கள் தான். ஆனால் இன்று பல இடங்களில் தலைமைத்துவ குறைபாடு காரணமாக மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன.செய்யத்தக்க ஒன்றைச் செய்யாமல் காரணம் கூறுவோர் அதிகம். நேர்மையான சிந்தனை, பிறருக்கு உதவுதல், பொறுப்பு உணர்வு போன்ற பண்புகள் பல இடங்களில் குறைவாகத் தெரிவதைக் காண்கிறோம். ஆகையால், கல்வியில் முன்னேறுவதோடு சேர்த்து உயர்ந்த மனிதப்பண்புகள் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நீங்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக திகழ்வீர்கள்.உங்களின் வளமான எதிர்காலத்துக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரும், நிறுவுநர் குடும்ப உறுப்பினருமான சி.வசீகரன் அவர்கள் கலந்துகொண்டார். அத்துடன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார். 

Related Posts