பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது. ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன். துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும். பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை. ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார். இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார். துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார். ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம்
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. – Global Tamil News
5