யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற காவற்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து , நிர்வாகத்தினர் கோப்பாய் காவற்துறையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காவற்துறை விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து , மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
: யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு – சோதனை நடவடிக்கைக்கு முஸ்தீபு! – Global Tamil News
			7