கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் கைது. – Global Tamil News

by ilankai

மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து  சென்ற  ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்தவராய் தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து  வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். முத்தரிப்புத்துறை, வங்காலை போன்ற இடங்களில் அவர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.குறித்த நபர் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தன்னை அடையாளப்படுத்தி  இருந்தார்.   சில இடங்களில் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு துறவற சபையாகிய அமலமரித் தியாகி குரு என்றும் வேறு சில இடங்களில் அங்கிலிக்கன் சபை குரு எனவும் கூறியுள்ளார்.  குறித்த நபர் நானாட்டாவில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பில் இட்டுள்ளார். அவர் பற்றிய தகவல் மன்னார்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நானாட்டானில் இருந்து மன்னார் நகருக்கு அவர்  பேருந்தில் சென்ற  வேளையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து காவல்துறையினா்  அவரை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்த காவல்துறையினா் அவர் உண்மையான குருவானவர் இல்லை என்பதையும் சிறியதொரு கிறிஸ்தவ சபை உறுப்பினர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.காவல்துறை  தடுப்பில்  வைத்த  காவல்துறையினர் அடுத்த நாள் அவரை மன்னார் நீதிமன்றத்தில்  முற்படுத்திய போது  விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை   விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  இதேவேளை இவ்வாறானவர்கள் மட்டில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மன்னார் ஆயர் இல்லம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts