வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்! – Global Tamil News

by ilankai

வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்காமல் புத்தாக்கமாக சிந்தித்து அடுத்த ஆண்டு செயற்படவேண்டும். வன்னி போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் அலைந்து திரிந்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார். இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பிரச்சினை என்பன முன்வைக்கப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு மாகாண ரீதியிலான பொறிமுறையை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேபோன்று கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு, கால்நடை மருத்துவர்களையும் பொறிமுறையை முன்மொழியுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Related Posts