எமது மாதாந்த ஊதியத்தை ஒழுங்காக வழங்க வேண்டும் – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து , இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவை என்பவற்றை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும்  நெடுந்தூர பேருந்து நிலையம் என்பவற்றுக்கு . யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி. சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் ,  யாழ். மாவட்ட மேலதிக செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ் மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், துறைசார் அதிகாரிகள், தனியார் போக்குவரத்து சேவையின் தலைவர், அரச போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட  குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு , அங்குள்ள  பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். அதன் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துதல் , பேருந்து நிலைய மலசல கூடங்களை தூய்மையாக பேணுதல் , மேலும் சில புதிய மலசல கூடங்களை அமைத்தல் , பேருந்து நிலைய வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுகளை உரிய முறையில் உரிய பொறிமுறை தொடர்ந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் , மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கடைகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அவற்றை அங்கிருந்து அகற்றி , அக் கடை வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு , நடவடிக்கைகளை துரித கெதியில் முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இணைந்த சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய நேரக்கணிப்பாளர் தெரிவிக்கையில், நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவையை நாம் நடத்த வேண்டுமானால் முதலில் எமது ஊதியத்தை குறித்த காலப்பகுதியில் மாதாந்தம் வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களம் ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் , நாம் இணைந்த சேவையை முன்னெடுக்க தயார் என தெரிவித்தார். அதேவேளை சாத்தியமற்றதென எதுவும் இல்லை. நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற அவசிய தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொடுத்தால் , நாம் இணைந்த சேவையை சாத்தியமாக்கி மக்களுக்கு இலகுவான அசௌகரியமற்ற சேவையை வழங்குவோம் என யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts